குரைப்பதை குறைக்கனும்!


ஐஐடி மாணவர்களின் விந்தணு தேவை. ரூ.20000 தரப்படும் - சென்னைத் தம்பதி.
அட பாருய்யா, ரொம்ப நல்லாப் படிச்சா இதுக்கும்கூட காசு கெடைக்கும்போல!

*

கோழைகள்தான் சாகப் பயந்துகொண்டு, வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் :)

*

படைப்பாளன் வாசகனிடம் காட்டும் கர்வத்தை, தெரியாத்தனமாக வாசகனே உருவாக்கி தந்துவிடுகிறான்.

*

மூடநம்பிக்கை மேல் கொண்டிருக்கும் நம்பிக்கையை ”மூடநம்பிக்கை”யென உணர்த்திடுதல் எளிதல்ல!

*

தூக்கம் வரும் பகற்பொழுதுகளைவிட, தூக்கம் தழுவாத இரவுகள் கொடுமை!

*

நாம காசு போட்டு வாங்குற பேனாவை விட, யாராச்சும் மறந்துபோய் நம்மகிட்ட விட்டுட்டுப்போற பேனா நல்லாவே எழுதுது மச்சி!

*

குதூகலத்தை மீட்டெடுத்து உயிரின் அறைகளை நிரப்பிவிடுவதில் பொங்கல் பண்டிகைக்கும், உள்ளூர் மாரியம்மன் நோம்பிக்கும் சிறப்பிடமுண்டு

*

இழுத்து இழுத்து கடைசியாக ஒரு வேலையை முடித்த பிறகு புரிந்தது.. இதை எப்பவோ முடிச்சிருந்திருக்கலாம் என்று! #புத்திக் கொள்முதல்

*

ஹேப்பி பொங்கல் & ”கவ்” பொங்கல்னு ஒரு பய வாழ்த்துது. யோவ், உங்க இங்கிலீசு பாசத்துக்கு அளவே இல்லையா?

*

மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்துப் படுங்க - செய்தி
# யாரோட இடது பக்கம்னு சொல்லுங்கய்யா! :)

*


ஜல்லிக்கட்டுக்கு வழக்கு போடுறவங்க இன்னும் சில வருசம் பொறுங்க. ஊர் பக்கம் மாடும், அடக்க மனுசனும் இருக்கமாட்டாங்க கொம்பில்லா சிந்துமாடுதான்

*

நன்றாக இல்லாதபோது ’நன்றாக இருந்தது’ நன்றாக இருக்கின்றது.

*

மீறவேண்டிய தேவையையும், ஆவலையும், கட்டாயத்தையும் பல நேரங்களில் விதிகளே உருவாக்குகின்றன

*

மேசை முனைகளில் முழங்காலை இடித்துக்கொள்ளும் கணங்களில் நரகம் எப்படியிருக்கும் என்பதை தற்காலிகமாக உணர்கிறோம் #ஓவர் பில்டப்பா இருக்கோ!? :)

*

சமூகவலைதளங்களில் தொடர / நட்பு ஏற்படுத்த பெரிதும் காரணங்கள் இருப்பதில்லை. துண்டித்துக்கொள்ள காரணங்கள் இருக்கின்றன #கண்டுபிடிப்பு :)

*

ஊட்டச்சத்து குறைபாடு தேசிய அவமானம் - மன்மோகன் வேதனை. வெட்கமேயில்லாமல் வேதனைப்படுவது எப்படி? - இங்கிட்டு கற்றுத்தரப்படும்!

*

சிக்னலில் சிவப்புவிளக்கு எரியும்போதே பின்னாலிருந்து ’ப்பீய்ங்..ப்பீய்ங்”னு ஹார்ன் அடிக்கும் ஆட்களுக்கு நடுரோட்ல சிலை வைக்கலாம்னு தோணது!

*

மாயாவதி சிலையை துணிபோட்டு மறைத்தனர். போட, போர்த்த துணியில்ல, ஆனா சிலை வைத்து-துணி போட்டு மறைக்க செலவழிக்கும் இந்தியா எங்கேயோதான் போகுது

*

ஒவ்வொரு முறையும் கேள்வியுறும் மரணச்செய்தியில் கொஞ்சம் நிம்மதி ஒளிந்திருக்கிறது, அது தன்னைக்குறித்து இல்லை என்பதாலும்!

*

தேடும்பொழுது மட்டுமே, தேடுவது அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை.

*

”இந்தியா வளர்ச்சிப்பாதையில் செல்கிறது - பிரணாப்” இவங்க எல்லாம் தங்களை மட்டுமே முழு இந்தியானு நினைச்சுக்குவாங்க போல!

*

தனிப்பட்ட முறையில், தனக்குப் பிடித்ததா இல்லையா என்பதையொட்டியே விமர்சனங்கள் அமைகின்றன.


*

ஒழுங்கா வண்டி ஓட்டுவோருக்கு சவால் விடுவதில் திறமைசாலிகள் மினிடோர் ஓட்டுனர்கள், ஆக்டிவா/ஸ்கூட்டி ஓட்டும் நடுத்தரவயது பெண்களே #முடியல :(

*

விடாமல் துரத்திக்கடிக்கும் கொசுவை, ஒரு வாய்ப்பு கிடைத்து போட்டுத்தள்ளும்போது இருக்கும் சுகமே அலாதிதான் #சிதறுவது நம் இரத்தமே எனினும்:)

*

காமம் பல இடங்களில் காமமாகவே இருக்கின்றது. வெகுசில இடங்களில் மட்டுமே அன்பின் மொழியாக தெரிகின்றது

*

எவர் குறித்தும் குறை சொல்லவும், பெருமையாகச் சொல்லவும் சில வார்த்தைகளை இருப்பில் வைத்திருக்கின்றோம்

*

குரைப்பதை.... குறைக்கனும் #நானும்

*

போறபோக்கைப் பார்த்தா நடிகர் ”தனுஷ்”க்கு எதிர்காலத்துல ”முதலமைச்சர்” ஆகுறதுக்கான எல்லாத் தகுதியும் இருக்குது போல! #நோட் பண்ணுங்கப்பா! :)

*

இயற்கைச் சீற்றத்தில் தாக்கப்படும் பகுதி சுற்றுலாத் தலமாகவும், பாதிக்கப்படும் மனிதர்கள் காட்சிப் பொருட்களாகவும் #இந்திய அரசியல் விளையாட்டு :(

*

Facebook-ல் Tag செய்வது என்பது காதல் கடுதாசி மாதிரி, யார், யாருக்கு வேணா கொடுக்கலாம். தடுக்க முடியாது, வந்த பிறகு கிழிச்சுப் போடலாம் :)

*

சச்சின் 100வது சதம் அடிக்கிறதுக்குள்ளே, எதிர் அணியில நூறு பேரு சதம் அடிச்சிருவாங்க போல! :)

*

போறபோக்கப் பாத்தா, ”ஒய் திஸ் கொலவெறி” மெட்டுல அடுத்த சீசனுக்கு அய்யப்பனுக்கும் பாட்டு போட்றுவாங்க போல!

*

நம்மைக் குறித்து நமக்குள்ளே நாம் கட்டமைத்துக்கொண்ட பிம்பத்திற்காகத்தான் இத்தனை போராடுகிறோம்

*


யார் மீதாவது, எதன் மீதாவது சாய்ந்து கொள்வதைத்தான் மனம் பெரிதும் விரும்புகின்றது.

*

கேப்மாரி / நாதாரி ஆகியவை சாதிப்பெயர் எனத்தெரியாமல், அர்த்தமும் தெரியாமல் கெட்ட வார்த்தையாகப் பயன்படுத்துவதில் தமிழன் கில்லாடி போல :(

*

”கேப்மாரி” என்பது ஒரு தகாத வார்த்தையென்று நினைத்திருந்தேன். அது ஒரு சாதியின் பெயர் என்று நேற்றுத்தான் படித்தேன் #என்ன கொடுமையிது!


*
முதல்வன் விஜய் நடித்திருக்க வேண்டிய படம் - ஷங்கர். # அப்போ இந்தியன் சிம்புவும் / எந்திரன் தனுஷ்ம் நடிச்சிருக்கவேண்டிய படமோ!

*


பல படங்களில் கதாநாயகிகளைவிட அவர்களோடு வரும் பெண்கள் கூடுதல் அழகாய்த் தெரிகிறார்கள். #கண்ணாடியை மாத்தனுமோ!? :)))

*

ஆனந்த (என்) விகடன் - மகளிர் தினம் - கட்டுரை

பெண் இல்லாமல் ஆண் இல்லை; ஆண் இல்லாமல் பெண் இல்லைஎன்று நிறையப் பேசினாலும், நிஜத்தில் ஆண்களோடு ஒப்பிடு கையில் பெண்களுக்கான வாய்ப்புகளும் சவால்களும் வித்தியாசமானவை. உடல் ரீதியாக வலிமை குறைந்து இருக்கும் பெண், பெரும்பாலான சூழல்களில் வெறும்  உடலாகவே உற்றுநோக்கப்படும் நிலை இருக்கிறது. பெண்கள் இல்லாத உலகத்தை நினைத்துப் பார்க்கவே இயலாது. தாயாகவோ, தாரமாகவோ, மகளாகவோ, உடன் பிறந்தவளாகவோ, ஒன்றுவிட்ட உறவாகவோ, நட்பாகவோ... ஏதோ ஒரு வகையில் பெண், ஆண் மகனை முழு மனிதனாக மாற்றிக்கொண்டே இருக் கிறாள்.

நான் கடந்துவந்த பாதையில் சில பெண்கள் எனக்குள் விதைத்த ஆச்சர்யங்கள் அசாத்தியமானவை. அதிலும் என் தூரத்து உறவுப் பெண்ணான பூங்கொடியும், எனக்குக் கற்றுக்கொடுத்த மலர்க்கொடியும் நிகழ்த்திய ஆச்சர்யங்கள் என்னை இன்றும் பிரமிக்கவைப்பவை. ஏனோ, என் விருப்பத்துக்கு என அவர்களுடைய பெயர்களை இங்கே மாற்றியே குறிப்பிடுகிறேன்.


ரோடு மாவட்டத்தில் உள்ளடங்கிய கிராமத்தைச் சேர்ந்த பெண் பூங்கொடி. அவள் காலத்தில் பெண்களுக்குக் கல்வி என்பது எட்டிக்காய். அதனால், அவள் எட்டாம் வகுப்பு எட்டியதே அதிசயம்தான். நகர்ப்புறத்தில் இருந்து மாப்பிள்ளைவந்து 18 வயதில் அவளைக் கைப்பற்றிப்போனார். அழகான ஒரு பெண் பிள்ளை அப்பா சாயலில் பிறந்தாள். கொடுமையான முன்னிரவுப் பொழுதில், திடீரென பூங்கொடி கைக்குழந்தையோடு விதவையாக நின்றாள்.

கணவன் பணிபுரிந்த அரசு சார் நிறுவனத்தில், கருணை அடிப்படையில் அவளுக்குப் பணி ஒதுக்க முன்வந்தனர். தகுதியாகக் குறைந்தது 10-ம் வகுப்புக் கல்வி தேவை. தளராமல் தனி வகுப்பில் படித்துத் தேர்ந்தாள். பணியில் இணைந்து, கைக்குழந்தையோடு அலுவலகத்துக்கு அருகிலேயே குடியமர்ந்தாள். இரவுகளில் பாதுகாப்புக்கு அம்மாவின் உதவி, மாமியார் குடும்ப உதவி எனக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை வலுப்படுத்தினாள். அடுத்த அதிர்ச்சியாக, உற்ற துணையாய்த் தன்னை எப்போதும் காப்பான் என நம்பிய அண்ணன் விபத்தில் இறந்துபோனான்.

எல்லா இன்னல்களையும் மௌனமாகக் கொன்று புதைத்தாள். தன்னை வலுப்படுத்துவதில் சற்றும் தளராமல் ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டு, சுயமாகச் சிந்திக்கும், சுயமாக நிற்கும் மனுஷியாகத் தன்னைக் கட்டமைத்தாள். விவசாயம், வேலை, மகளின் கல்வி, சேர்ந்துகிடந்த கடனைச் சிறுகச் சிறுக அடைத்தல் என ஒவ்வொரு நாட்களும் அவளை உலுக்கி  நகர்ந்தன. ஒரு கட்டத்தில் தவிர்க்க இயலாத காரணத்தால், தன் வேலையையும் துறந்தாள். எனினும் எல்லாம் கடந்து, இன்று உற்று அவதானித்த ஒவ்வொருவரும் அசந்துபோகும் வண்ணம் நிமிர்ந்து நிற்கின்றாள்.

கிராமத்தில் இருந்து பெரு நகருக்குப் புலம்பெயர்ந்தவள் மலர்க்கொடி. சொந்த பந்தங்களில் முதல் பொறியியல் பட்டதாரி. குடும்பத்தினரின் ஏற்பாட்டின்பேரில் திருமணம் நடந்தது. சில மாதங்களிலேயே தனக்குப் பொருத்தமில்லா வாழ்க்கை எனப் புரிந்துகொள்கிறாள். தவிர்க்கமுடியாத சூழலில் புகுந்தகம் பிரிந்து சில மாதக் கருவோடு பிறந்தகம் புகுகிறாள். விவரிக்கமுடியாப் போராட்ட காலகட்டம் அது. மகள் பிறந்தாள். ஏதாவது செய்யவேண்டும் எனும் வேட்கையோடு பொறியியல் பட்டத்தை வைத்துக்கொண்டு வேலை தேடினாள்.

ஒரு கல்லூரியில் தன்னைப் பணியில் இணைத்துக்கொண்ட மலர்க்கொடி, பணியாற்றிக்கொண்டே கல்லூரி உதவியுடன் முதுகலைப் படிப்பு படித்தாள். தான் சார்ந்த கல்வி தொடர்பான அனைத்து வேலைகளிலும் தன்னை முனைப்போடு ஈடுபடுத்திக்கொண்டாள். பயிற்சி, கருத்தரங்கு, தேர்வுத்தாள் திருத்தல் எனப் பல ஊர்களுக்குப் பயணப்பட்டாள். மகள், குடும்பம், வீடு எனப் பல பணிகளுக்கிடையே மிகுந்த முனைப்போடு படித்து பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றாள். ஈரோடு மாவட்டத்தில் தலைசிறந்த பொறியியல் கல்லூரி ஒன்றில்  பெருமை நிறைந்த ஒரு பேராசிரியையாக இன்று நிமிர்ந்து நிற்கிறாள்.



வர்கள் மட்டுமல்ல...  
உங்கள் அருகில் பார்வையைக் கொஞ்சம் ஆழச் செலுத்திப் பார்த்தால், அங்கேயும் ஒரு பொற்கொடி, பவளக்கொடி, அன்னக்கொடி, அருள்கொடி இருப்பார்கள். பூங்கொடியும் மலர்க்கொடியும் தங்களுக்கு இடப்பட்ட சவால்களைக் கண்டு சற்றும் அஞ்சாதவர்கள் என்று சொல்லிவிட முடியாது. அந்தச் சவால்கள் அவர்களுக்குள் ஊட்டிய அயர்ச்சி, வலி, வேதனை, பயம், சுமை, ரணம், அவநம்பிக்கை, திகைப்பு ஆகியவற்றை, அனுபவித்திராத எவராலும் புரிந்திட முடியாது.  

ஆனால், சவால்கள் முன் மண்டியிட்டு இவர்கள் தங்களை வீழ்த்திக்கொள்ளாததற்கு, அவர்கள் தங்களுக்குள் வைத்திருந்த நம்பிக்கைதான் காரணம். மனதில் அவர்கள் நிழலாடும்போது எல்லாம் 'பெண் பலவீனமானவள்எனும் ஒப்பீட்டு வார்த்தைகளைப் புறந்தள்ளுகிறேன். சதைகளின் வாயிலாக, பாலினம் வாயிலாக, பொருளாதாரம் வாயிலாக, சமூக ஒழுக்கம் எனும் மாயை வாயிலாக, 'நீ பெண்எனும் மனோபாவத்தின் வாயிலாக இந்தச் சமூகத்தின் ஒரு பாதி எந்த அளவுக்கு அவர்களை முடக்கிப்போட முனைந்திருக்குமோ, அதே அளவுக்குச் சமூகத்தின் மறுபாதி அவர்களைக் கைபிடித்துத் தூக்கி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தன் மேல் தளரா நம்பிக்கைக் கொண்டோர் வெல்வார்கள்; வாழ்வார்கள் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை.




-0-

நன்றி: ஆனந்தவிகடன் - என் விகடன் (கோவை)    |   ஓவியம்:பாரதிராஜா
 
-

எங்க ஊரு ஈரோடு


காவிரியும் பவானியும் கலந்து பெருக்கெடுத்து ஓடும் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள அழகிய நகரமே ஈரோடு. ஆற்றுக்கும் நகருக்கும் இடையே வெகு அழகாய் கடந்து போகிறது காலிங்கராயன் கால்வாய். தாழ்வாய் ஓடும் ஆற்றங்கரையோரம் இருக்கும் நிலம் பயனுறவே கி.பி 1282ல் அமைக்கப்பட்ட கால்வாய் அது. காலிங்கராயன் கால்வாய் குறித்துப் பக்கம்பக்கமாப் பேசலாம். அருகில் ஓடும் ஆற்றின் கரையிலேயே உயரமான நிலப்பரப்பில் ஓடும் தொழில்நுட்பம் மிகுந்தது அந்தக்கால்வாய்.

ஒரு நகரம் என்பது உயிரற்ற பொருளாக இருக்க முடியாது. அதுவும் கிட்டத்தட்ட ஒரு உயிரினத்தின் உடல் போன்றுதான். எனக்கு ஈரோடு நகரை பருந்துப்பார்வை பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு மனிதன் கிழக்குப் பக்கம் தலை வைத்து தன் கைகளை விரித்து மல்லாந்து மேற்கில் கால் நீட்டி படுத்திருப்பது போலவே தோன்றும்.

நானறிந்த நகரங்களில் ஈரோடு நகரை மிக அழகான நகரம் என்று என்னால் சொல்லமுடியுமா என்று தெரியவில்லை. அதே சமயம் மிகக் கச்சிதமான ஊர் என்றும், மிக அமைதியான நகரம் என்றும் மிகுந்த பெருமையாகச் சொல்வேன். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு என்று எதையாவது பட்டியலிடலாம். ஆனால் ஈரோடுக்கு அடையாளமாகச் சொல்லவிரும்புவது அமைதி என்பதைத்தான்.

உண்மையில் பார்த்தால் ஈரோடு என்பது பல பெருமைகளை உள்ளடக்கிய நகரம். பகுத்தறிவுப் பகலவன் பெரியாரைத் தந்த மண். கணித மேதை ராமானுஜத்தை தந்த மண். பாரதியின் கடைசி உரையை கேட்கும் வாய்ப்பை பெற்ற மண்.

இன்று ஈரோடின் அடையாளமாகத் திகழ்வது மஞ்சளும், இந்தப் பகுதியில் தயாரிக்கப்படும் துணிவகைகளுமே. சுற்றுவட்டார மாவட்டங்களிலும் விளையும் மஞ்சளைச் சந்தைப்படுத்தும் மஞ்சள் மண்டிகள் மற்றும் ஏலவிற்பனை, இப்பகுதிகளில் தயாரிக்கப்படும் கைத்தறி, விசைத்தறித் துணிகளை விற்பனை செய்ய வாராவாரம் கூடும் ஜவுளிச்சந்தை, பெருந்துறை சாலையில் வானுயர்ந்து நிற்கும் மருத்துவமனைகள், நகரத்தின் புறவெளிகளில் பெருகி வரும் கல்வி நிறுவனங்கள் என அக்கம் பக்கம் இருக்கும் கிராமத்து மக்களை நகரம் வெகுவேகமாக ஈர்த்து வருகின்றது.

வெகு வேகமாய் மாறிவரும் உலகத்தின் ஓட்டத்தில் ஈரோடு நகரமும் நெரிசல் மிகுந்த நகரமாக மாறிவந்தாலும் நகரத்தின் மையத்தில், இன்னும் கட்டடம் முளைக்காத கொஞ்சம் மிச்சமிருக்கும் நிலத்தில் சோளம் விதைத்து அறுவடை செய்யும் வித்தியாசத்தைக் கொண்டுள்ள நகரம். 

பிரப் சாலை என அழைக்கப்படும் பிரதானச் சாலையை மையப்படுத்தி இரு பக்கமும் பிதுங்கிப்பிதுங்கி வளர்ந்து வரும் நகரம். பிரப்சாலையின் மேற்குப் பக்க நீட்சியாக பெருந்துறை செல்லும் சாலையில் இன்று வேகுவேகமாக நாலு கால் பாய்ச்சலில் வளர்ந்து கொண்டிருகின்றது.

சில ஆண்டுகளுக்கு முன் ஈரோட்டிலிருந்து எந்தப்பக்கம் இருக்கும் நகரங்களுக்குச் சென்றாலும், விவசாய நிலங்கள் மட்டுமே பசுமை போர்த்திக்கிடக்கும். இப்போது சாலையோரங்கள் தோறும் வண்ணக் கட்டிடங்கள் முளைத்து சுற்றிலும் இருக்கும் எல்லா நகரங்களோடும் இணைந்து, தன்னை சில ஆண்டுகளுக்கு முன் நகராட்சியிலிருந்து மாநகராட்சியாக பெயர் மாற்றிக்கொண்டுள்ளது. பெயர் மாற்றிக்கொண்டாலும் அதற்கான அடையாளமாக எதுவும் இன்னும் பதிக்கத் தொடங்கவில்லை. 

தமிழகத்தின் வடமேற்குப் பகுதியின் மையம் என்றே ஈரோட்டைச் சொல்லலாம். பவானி, அந்தியூர், மேட்டூர், குமாரபாளையம், சங்ககிரி, சேலம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, நாமக்கல், சித்தோடு, கோபி, சத்தி,   பெருந்துறை, திருப்பூர், கோவை, காங்கயம், தாராபுரம், பழனி, கரூர், திருச்சி, மதுரை என அனைத்து திசைகளிலிருந்தும் சாலைகள் வழியே பிணைந்து கிடக்கின்றது ஈரோடு.

நகரத்தின் தென் பகுதியில் நீண்டு கிடக்கிறது ஈரோடு ரயில் நிலையம். இந்தியாவின் பெருநகரங்களை இணைக்கும் தொடர்வண்டிகள் தினந்தோறும் ஈரோடு வழியே தடதடத்துக்கொண்டுதான் இருக்கின்றன. தொடர்வண்டி நிலையத்தை ஒட்டியிருக்கும் இரயில்வே குடியிருப்பும் அதன் மைதானமும் அழகியல் நிறைந்த ஒரு தோப்பு போன்ற அமைப்புக்கொண்டது.

ரயில் நிலையத்திலிருந்து வெளியேறி இடது பக்கம் திரும்பினால் மேட்டூர் சாலை துவங்கும். அதன் வழியே நகரின் மையப்பகுதியான அரசு மருத்துவமனை சந்திப்பை அடையலாம். சந்திப்பின் மையத்தில் எம்ஜிஆர் விரல் சுட்டி சிலையாய் நின்று கொண்டிருப்பார். எம்ஜிஆர் விரல் சுட்டும் திசையில் நகர்ந்து, உயர்ந்த மருத்துவ கட்டிடங்களைக் கடந்து செல்கையில், ஈரோடு பகுதி மக்களை ஆட்டுவிட்டுக்கும் நோய்களின் கொடுமையை அறியலாம். இன்னும் கடந்தால் நம்மை வரவேற்பது ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம். எதிர்புறம் பிரியும் சாலையின் முகப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் அமைந்திருக்கின்றன. சிறிது தொலைவு சென்றால் சம்பத் நகர் குடியிருப்பு வரும். அங்குதான் ஈரோட்டின் புகழ்பெற்ற உழவர் சந்தை அமைந்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தாண்டி நேராகச் சென்றால் சில திருமண மண்டபங்கள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் என திண்டல் மலை வரை நகரம் நீண்டுகிடக்கும். திண்டலில் இருக்கும் முருகன் கோவில் இந்தப் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். திண்டல் மலையைக் கடந்து அகன்று விரிந்திருக்கும் சாலை நம்மை பெருந்துறை நோக்கி அழைத்துச்செல்லும். பெருந்துறை சாலை முழுக்க பொறியியல் கல்லூரிகளும், கலைக்கல்லூரிகளும் ஆட்கொண்டுள்ளன.

எம்ஜிஆர் சிலை சந்திப்பிலிருந்து வடமேற்காய் பிரியும் சிறு சாலை வழியே நசியனூர் சென்றால் எளிதில் தேசிய நெடுஞ்சாலை 47-ஐ அடையலாம். வலது பக்கம் திரும்பினால் மைய, முக்கிய சாலையான பிரப்சாலை வரும். எல்லாம் விடுத்து நேராக மேட்டூர் சாலையில் சென்றால், நாம் அடைவது நகரின் முக்கியத் திரையரங்குகளையும், பேருந்து நிலையத்தையும். பேருந்து நிலையத்தைக் கடந்து இடது பக்கம் திரும்பினால் சித்தோடு, கோபி, சத்தி, மைசூர் என நீளும் சத்தி சாலை. அந்த சத்தி சாலையில்தான் பாரம்பரியம் மிக்க கல்லூரியான சிக்கய்யநாயக்கர் கல்லூரி இருக்கின்றது. 

சத்தி சாலையில் திரும்பாமல், நேராகச் செல்லும் சாலையில் சில அடிகள் சென்றால் வ.உ.சிதம்பரனார் பூங்காவும், மைதானமும் வரும். ஈரோடு நகரின் பெரும்பாலான மக்கள் காலையில் நடைபன்றும் தேயாமல் இருக்கும் மைதானம். அந்த மைதானத்தின் பின் புறம் நீண்டு கிடக்கும் காலியிடம்தான் ஈரோட்டின் புண்ணிய பூமியாக சில வருடங்களாக மாறியிருக்கின்றது.

அந்த புண்ணிய நிகழ்வு என்பது மக்கள் சிந்தனைப்பேரவை அமைப்பு நடத்தும் புத்தகத்திருவிழா தான். கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த மைதானத்தில்தான் ஈரோடு புத்தகத்திருவிழா நடந்து கொண்டிருக்கின்றது. பல லட்சக்கணக்கான மக்கள் அறிவுப்பசி கொண்டு தேடித்தேடி கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு வாங்கிச்சென்ற புத்தகங்களின் வாசனை அந்த மண்ணில் ஆண்டு முழுதும் நீந்திக் கொண்டேயிருக்கும். 

மைதானத்தையொட்டி அமைந்திருக்கின்றது வ.உ.சி பூங்கா. எனக்குத் தெரிந்து உள்ளூர் மக்கள் அதிகம் பயன்படுத்தாத பூங்கா என்றால் இதைத்தான் சொல்லவேண்டும் என நினைக்கிறேன். நானறிந்த நண்பர்கள் வட்டத்தில் எவரும் பூங்காவில் சென்று இளைப்பாறியதாகவோ, பார்த்து ரசித்ததாகவோ சொன்னதில்லை.

சத்தி திரும்பும் சாலைக்கு எதிர்புறச்சாலையில் நகர்ந்தால் முதலில் வரும் இடதுபக்கப் பிரிவுதான் பவானி வழியே அந்தியூர், மேட்டூர் மற்றும் கருங்கல்பாளையம்-பள்ளிபாளையம் வழியே சங்ககிரி சேலம், மற்றும் திருச்செங்கோடு, நாமக்கல் என இட்டுச்செல்லும், மூலப்பட்டறை சாலை. மூலப்பட்டறை பிரிவில் திரும்பாமல் நேரே நகர்ந்தால் இருமருங்கிலும் கட்டிடம் தொடர்பான பொருட்களை விற்கும் கடைகள் விரிந்து பரந்து கிடக்கும். இன்னும் கொஞ்சம் கடந்து வளைந்து நெளிந்து முட்டி மோதியெட்டினால் வரும் இடம் ”பழையபேருந்து நிலையம் என்று அழைப்பதும்கூட மறந்து போன” தற்சமயம் காய்கறி அங்காடி இருக்கும் பகுதி, அங்குதான் ஈரோடு மாவட்டத்தின் ஆகச்சிறந்த பெரிய பிரமாண்டமான நடைக்கடைகளும், துணிக்கடைகளும் உயர்ந்தோங்கி பளபளத்து நின்றுகொண்டிருக்கின்றன.

கடைகளிலிருந்து கசிந்து வரும் குளிரூட்டிகளின் குளிர் அந்தச் சாலையெங்கும் தென்றலாய் வீசும். அப்படியே ஒரு வழிச்சாலையில், நெரிசலில் நகர்ந்தால் வரும் இடம் மிகப் பழமையான மணிக்கூண்டு பகுதி, அங்கிருந்து வலது பக்கம் திரும்பினால் பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் வரும். நேராகச்சென்று நகரக்காவல் நிலையம் அருகே இடது பக்கம் சிறிது தூரம் சென்றால் தந்தை பெரியார் வசித்த பெரியார்-அண்ணா நினைவகம் வரும். காவல் நிலையம் தாண்டி வலதுபக்கம் திரும்பினால் வந்தடையும் இடம் பன்னீர் செல்வம் பூங்கா. 

ப.செ.பூங்காவில் துவங்கும் பிரப் சாலையில்தான் கிறிஸ்துவ தேவாலயமும், பழம்புகழ் பெற்ற சி.எஸ்.ஐ மருத்துவமனையும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஈரோடு பெரியமாரியம்மன் கோவிலும், மாநகராட்சி கட்டிடமும், டெலிபோன் பவனும், நூற்றாண்டுகளைக் கடந்த கலைமகள் மகளிர் மேல்நிலைப்பள்ளியும், செங்குந்தர் பள்ளியும் வீற்றிருக்கின்றன. இறுதியாய் முதலில் பார்த்த எம்ஜிஆரின் முதுகு வரை செல்லலாம். பெரியமாரியம்மன் திருவிழா என்பதுதான் ஈரோடு மக்களின் ஒட்டுமொத்த கொண்டாட்டத்துக்கான திருவிழா. பதினைந்து நாட்கள் நடைபெறும் திருவிழாவிற்காக பிரப் சாலையே கிட்டத்தட்ட முடங்கும் என்பதுபோல் திருவிழா கடைகளும், கூட்டமும் பொங்கி வழியும்.

பன்னீர் செல்வம் பூங்காவிலிருந்து தெற்கில் பிரியும் காந்திஜி சாலையின் முகப்பில் வருவது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளார் அலுவலகம். நேராகச்சென்றால், டெலிபோன் அலுவலகம், தபால் நிலையம், அடுத்து ஈரோட்டின் மிகச்சிறந்த குடியிருப்பு பகுதியாக அறியப்படும் பெரியார் நகர் குடியிருப்பின் கிழக்குப்புற முகப்பு வளைவு வரும். அதிவசதி படைத்த நபர்களிலிருந்து, அருகில் ஓடும் சாக்கடைப்பள்ளம் ஓரமாக வசிக்கும் ஏழ்மை நிறைந்த மனிதர்களை வரை உள்ளடக்கியது பெரியார் நகர். 

காந்திஜி சாலையில் நேராகக் கடந்தால் வலது பக்கம் தீயணைப்பு நிலையம் அமைந்திருக்கும். அதற்கு எதிர்புறச்சந்தில் ”கோழி முட்டை” வடிவில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஆனூர் திரையரங்கு அமைந்திருக்கும்.

சில அடிகள் தூரம் சென்றால் வரும் இடம்தான் காளைமாடு சிலை சந்திப்பு. தென்மாவட்டங்களிலிருந்து வரும் சாலைகளின் முகப்புப் பகுதி அதுதான். இடது பக்கம் திரும்பி பயணித்தால் ரயில் தண்டவாளங்களுக்கு அடியில் நுழைந்து கொல்லம்பாளையம் வழியே காங்கயம் தாராபுரம் பழனி செல்லும் சாலையும், கொடுமுடி கரூர் திருச்சி மதுரை செல்லும் சாலையும் நம்மை இரண்டாக பிரிக்கும். காளைமாடு பிரிவின் வலது பக்கம் திரும்பினால் நாம் முதலில் புறப்பட்ட ரயில் நிலையம் வரும்.

எளிமையும், நீங்கா அமைதியும் நிறைந்திருக்கும், பெருமை வாய்ந்த ஆறும், அழகிய கால்வாயும் அருகருகே பாயும் நகரத்தின் அடையாளாமாக தற்போது மாறியிருப்பது மாசடைந்த சுற்றுச்சூழல் என்றே சொல்லவேண்டும். ஈரோடு நகரையொட்டிய பெரும்பாலான இடங்களை ஆக்கிரமித்த தோல் தொழிற்சாலைகள், சாய ஆலைகளிலிருந்து பல்லாண்டுகளாக வெளியேறிய கழிவுகள் சிறிது சிறிதாக நிலத்தடி நீரை மாசுபடுத்தி, இன்றைக்கு தண்ணீரைச் சுத்திகரிக்காமல் குடிக்கமுடியாது என்ற அளவுக்கு சேதப்படுத்தியுள்ளன. புற்றுநோய், சிறுநீரகக் கல், மலட்டுதன்மை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகத்தின் மற்ற பெருநகரங்களோடு போட்டியிடுவதில் முன்னணியில் உள்ளது என்ற வருத்தத்தையும் பதிவாக்கியே தீரவேண்டும்.

ஒரு நகரம் என்பது மிக நீண்ட வரலாற்றினை பல யுகங்களுக்கு தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அந்த வரலாற்றின் பக்கங்கள் வளம் நிறைந்ததாக இருப்பதே நலம், வலி நிரம்பியதாக இருப்பதல்ல.

-0-

மார்ச் மாத வடக்குவாசல் பத்திரிக்கையில் கட்டுரையின் சில பகுதி வெளியாகியுள்ளது


இது படிச்சீங்களா?

Related Posts with Thumbnails